ஷுப்மன் கில் எட்ஜ்பாஸ்டன் வெற்றியில் நாயகனாக உயர்ந்தெழுந்து நிற்கிறார். 430 ரன்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அருமையான கேப்டன்சியில் இங்கிலாந்தை வெற்றி கொள்ளவும் செய்தார் என்பது செய்தி, ஆனால் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் கூறுவது என்னவெனில் ஷுப்மன் கில் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, இங்கிலாந்து அணியைக் களைப்படையச் செய்து சிதைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
‘தி கார்டியன்’ இதழுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: ஷுப்மன் கில் ஒரு அரிய இன்னிங்ஸை ஆடிவிட்டார். வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, மாறாக இங்கிலாந்து அணியை களத்தில் நீண்ட நேரம் பந்து வீச வைத்து, பீல்டிங் செய்ய வைத்துக் களைப்படையச் செய்துவிட்டார். களைப்பினால் இங்கிலாந்து பேட்டர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போனது, எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பதில் தெரிவுகளே இல்லாமல் ஏனோ தானோவென்று ஆட நேரிட்டது. இதோடு கிரீசில் அவர்களது இயக்கமும் கால்நகர்த்தல்களையுமே கில்லின் இன்னிங்ஸ் பாதிக்கச் செய்தது.
கில்லின் சக்தி, திறமை, மற்றும் தீராத அவா ஆகியவற்றிற்கு இந்த டெஸ்ட் ஒரு நிரூபணம். ரன்களை எடுப்பது மட்டுமல்ல, இளம் அணியை புதிய கேப்டனாக உத்வேகத்துடன் வழிநடத்தியதும் ஷுப்மன் கில்லை எப்படி எதிர்கொள்வது என்ற விவாதங்களை இங்கிலாந்து ஓய்வறையில் கிளப்பியிருக்கும். பொதுவாக கேப்டன்சி பேட்டிங்கை பாதிக்கும். ஆனால் இவருக்கோ பேட்டிங்கில் உச்சத்தைத் தொட வைத்துள்ளது. ஷுப்மன் கில்லின் டெக்னிக் கிளாசிக் டெஸ்ட் மேட்ச் டெக்னிக்.
அவர் தன் செல்வாக்கை மட்டும் உருவாக்கவில்லை, வரலாறு படைக்கிறார். கில்லின் ஆட்டம், ரன் குவிப்பு 1930 ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேன் எடுத்த 974 ரன்களையும் முறியடித்துவிடும் போல் தெரிகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டும் என்பதை கில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2017-18 ஆஷஸ் தொடரில் நான் இங்கிலாந்தின் பேட்டிங் கோச் ஆகச் சென்றிருந்தபோது ஸ்டீவ் ஸ்மித் இரண்டு அவுட் ஆகா சதங்களையும் ஒரு இரட்டைச்சதத்தையும் எடுத்தார், சராசரி 137. எங்களால் அவரை வீழ்த்தவே முடியாது, அவுட் ஆக்கவே முடியாது என்ற நிலை எங்கள் ஆன்மாவையே சிதைத்துவிட்டது.
ஷுப்மன் கில்லுக்கு சவால் அளிக்க புதிய உத்திகளை பென் ஸ்டோக்ஸ் வகுத்தெடுக்க வேண்டும். பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங் நன்றாக வீசினர், ஆனால் உலகத்தரமான ஒரு பேட்டிங்குக்கு எதிராக போதாது. லார்ட்ஸில் 30 டிகிரி வெயில் அடிக்கும் ஸ்விங் இருக்காது ஆகவே ஜோப்ரா ஆர்ச்சர் வர வேண்டும். கஸ் அட்கின்சனும் வந்துள்ளார் அவரும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக மே மாதம் வீசியதோடு சரி. காயத்திலிருந்து வருகிறார்.
சாம் குக், ஜோப்ரா ஆர்ச்சர் இருவரும் இருந்தால் ஷுப்மன் கில் புதிதான ஒரு பந்து வீச்சை, புதிய வேகத்தை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் மார்க் ராம்பிரகாஷ்.