மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து ட்ரீம்11 நிறுவனம் விலகியுள்ளது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) ட்ரீம்11 தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புதிய ஸ்பான்சருக்கான தேடலை அணி நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் மக்களவையில் ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். அந்த மசோதா தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஸ்பான்சராக உள்ள ட்ரீம்11 விலகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடரும், மகளிர் உலகக் கோப்பை தொடரும் தொடங்க உள்ள நிலையில் புதிய ஸ்பான்சரை தேடும் பணியை பிசிசிஐ தரப்பு வேகப்படுத்தி உள்ளதாக தகவல். விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு, புதிய ஸ்பான்சர் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அது நடக்காத பட்சத்தில் இந்திய அணி, அதன் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களம் காணும் சூழல் உள்ளது.
“அண்மையில் பிசிசிஐ அலுவலகத்துக்கு ட்ரீம்11 நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது இந்திய அணிக்கு தங்களால் தற்போது ஸ்பான்சர்ஷிப் அளிக்கும் சூழல் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிக்க சில நாட்கள்தான் உள்ளது. அதனால் பணிகளை வேகப்படுத்தி உள்ளோம்” என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் அந்நிறுவனம் முன்கூட்டியே விலகி உள்ளது.