2007-ல் டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பை, பிறகு 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகத் திகழ்ந்தார். இன்று பணிச்சுமை பற்றி பேசுகிறோம். அப்போது கேப்டன்சி, பிரஸ் மீட், பயிற்சி, 3 வடிவங்களிலும் விக்கெட் கீப்பிங் என்று தோனி கடுமையான ஒரு ஷெட்யூலில் இருந்தார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் டீமாக இந்திய அணி 2 ஆண்டுகள் இருந்தது. உயர் அழுத்தப் போட்டிகள், கடுமையான பயிற்சிகள், செய்தியாளர்கள் சந்திப்பு, விளம்பர நிகழ்வுகள், அதைத்தவிர சமூக நிகழ்வுகள் என்று தோனி கடும் பிசியாக இருந்த காலக்கட்டத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சியையே கைவிட்டு விட்டார் என்று முன்னாள் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் அவர் கூறியதாவது: தோனி 8-9 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடிய பிறகே விக்கெட் கீப்பிங்கிற்கு என்று பிரத்யேகப் பயிற்சியை கைவிட்டு விட்டார். இதே தோனி 2007-க்கு முன்னும் பின்னும் சில காலம் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளில் நிறைய ஈடுபடுவார். விக்கெட் கீப்பிங்கில் அவரது டெக்னிக் தனித்துவமானது. அவருக்கென்று ஒரு பாணி வைத்திருப்பார்.
அவரது விக்கெட் கீப்பிங் உத்தி மரபுப் பிறழ்வானது என்று கூற மாட்டேன். ஆனால், அவரது உத்தி நன்றாக அவருக்கு வேலை செய்தது. நல்ல பலன்களை அளித்தது. ஒருமுறை அவரிடம் கேட்டபோது 3 வடிவங்களிலும் ஆடுவதால் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது, போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வதே போதும், தனியாகப் பயிற்சி செய்து விரல்களில் காயம் அடைய விரும்பவில்லை என்றார்.
ஆனால், அவரது ரிஃப்ளெக்ஸ் அபாரமாக இருந்தது. ரிஃப்ளெக்ஸ் நன்றாக இருப்பதற்காக சில பயிற்சிகளை அவர் விடாமல் செய்து வந்தார். ரியாக்ஷன் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். அதனால்தான் மின்னல் வேக கீப்பிங் அவருக்குச் சாத்தியமாயிற்று.
ஆனால், நான் பார்த்ததில், பயிற்சி அளித்ததில் விருத்திமான் சாஹாதான் சிறந்த விக்கெட் கீப்பர். அணியில் அவரைப் போன்ற ஒருவர் இருப்பது மிக உதவியாக இருக்கும். விக்கெட் கீப்பராக அணிக்கு அவர் கொண்டு வந்த அர்ப்பணிப்புணர்வு உண்மையில் பெரிய பங்களிப்பு. இவ்வாறு கூறினார் ஆர்.ஸ்ரீதர்.