மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் நேற்று ரிஷப் பந்த் காயமடைந்ததைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரை களமிறக்காமல் ஷர்துல் தாக்கூரை ஏன் இறக்க வேண்டும் என்று ஷுப்மன் கில் – கம்பீர் கூட்டணிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
வாஷிங்டன் சுந்தர்தான் இந்திய அணியின் ‘ஆபத்பாந்தவர்’. நெருக்கடி தருணங்களில், எதிரணியினர் சப்தங்களைப் போட்டுக் கொண்டு ஆரவாரம் செய்யும் தருணங்களில் கிரீசில் கொஞ்சம் அமைதியை நிலைநாட்டி ஆடுபவர் சுந்தர். நேற்று சாய் சுதர்ஷன் அத்தகைய அமைதியான ஒரு நிலையை தன் மரபான ஆட்டம் மூலம் கொண்டு வந்தார்.
ரவி சாஸ்திரி சொல்வது போல் வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்தால் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வாஷிங்டன் சுந்தரை 3-ம் நிலையில் களமிறங்க தயார்ப்படுத்த வேண்டும். அப்படிச் செய்து அதில் அவர் செட்டில் ஆகிவிட்டால் குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்க மார்க்கமுண்டு. இந்நிலையில், திடீரென அணிக்குள் வரும் ஷர்துல் தாக்கூரை புரொமோட் செய்து வாஷிங்டன் சுந்தரை இப்போது புதிய பந்துக்கு கொண்டு நிறுத்துவது சரியானதல்ல என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
தினேஷ் கார்த்திக் தனது வர்ணனையில் சில அட்டகாசமான கேள்விகளை எழுப்பி வருவதோடு, இங்கிலாந்து வர்ணனையாளர்களின் ‘கொழுப்புக்கும்’ தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சுந்தரை இறக்காமல் ஷர்துல் தாக்கூரை இறக்கியது குறித்து தினேஷ் கார்த்திக் சாடுகையில், “நான் உண்மையில் ஆச்சரியப்பட்டேன். வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் மட்டுமல்லாது, இதற்கு முன்பும் கூட நெருக்கடி தருணங்களில் இறங்கி நிதானத்துடன் ஆடியதைப் பார்த்திருக்கிறோம். முறையான பேட்டர்கள் எதிர்முனையில் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் அவருக்கு உறுதுணையாக ஸ்டேண்ட் கொடுத்து ஆடுவதில் வல்லவர்.
ரிஷப் பந்த் காயத்தில் வெளியேறினார். சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்திருக்கிறார். இதுதான் சுந்தர் இறங்கி நிலைப்படுத்தச் சரியான தருணம்” என்றார் தினேஷ் கார்த்திக்.
ரிக்கி பாண்டிங் கூறும்போது, “சுந்தரின் சராசரி 39, ஷர்துல் தாக்கூரின் சராசரி 17. ஷர்துல் நைட் வாட்ச் மேனும் அல்ல. ஏனெனில் இன்னும் 40 நிமிட நேர ஆட்டம் மீதமிருந்தது. புதிய பந்து எடுக்கும் நேரமும் வந்து விட்டது. இவையெல்லாம் சுந்தரை ஷர்துலுக்கு முன்னால் இறக்க வேண்டிய நிர்பந்தத்தை வலியுறுத்துகின்றன” என்றார்.