2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களின் பாசாங்குத் தனம் என்று சாடியுள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றனர். இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார், அணியில் ஷிகர் தவன், ஹர்பஜன், ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பாத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டி அவர்கள் விளையாட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களைச் சாடிய போது, “வெளியே பொதுமக்களிடத்தில் இரு அணிகளும் ஆட மாட்டோம் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள், ஆனால் உள்ளே, திரைக்குப் பின்னால் இந்திய-பாக் வீரர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர், ஒன்றாகத் தங்குகின்றனர், ஒன்றாக உணவருந்துகின்றனர், ஒன்றாக ஷாப்பிங் செல்கின்றனர், விருந்தில் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் மேட்ச் என்று வந்து விட்டால் மட்டும் ஆட மாட்டோம் என்று சீன் போடுகின்றனர். பொதுமக்களிடையே என் ஒரு போலித்தனமான, பாசாங்குத் தனமான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்?
பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்ல, இந்திய வீரர்களும் இப்படித்தான் உணர்கிறார்கள். நாங்கள் ஆடும்போது ஓய்வு அறையைப் பகிர்ந்து கொள்வோம், சேர்ந்து உண்போம், சேர்ந்து ஷாப்பிங் செல்வோம், களத்திற்கு வெளியே நாங்கள் சிறந்த நண்பர்கள். ஆனால் பொதுமக்களிடையே ஏதோ பெரிய பிளவு இருப்பது போல் காட்ட வேண்டியது ஏன்? இவையெல்லாம் தேவையற்ற ஊதிப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் பாவம், அவர்கள்தான் ஏமாறுகின்றனர், அவர்களை ஏமாற்ற நமக்கு உரிமை இல்லை. கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரித்து வையுங்கள். நிரந்தரமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டை நிறுத்தி வைக்க முடியுமா? விளையாட்டில் அரசியல் கலக்க வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.
முன்னாள் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடியும் ‘கிரிக்கெட்டையும் அரசியலையும் பிரித்து வையுங்கள், நாம் இங்கே கிரிக்கெட் ஆட வந்துள்ளோம். வீரர்கள் நாட்டின் தூதுவர்களாகச் செயல்பட வேண்டுமே தவிர தர்ம சங்கடமாக மாறிவிடக் கூடாது. மேலும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட விரும்பவில்லை, எனில் தொடருக்கு வருவதற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். வந்து விட்டு மேட்சை கேன்சல் செய்ய வைப்பதா?’ என்று சாடியுள்ளார்.