பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற இருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பிரெட் லீ மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்த தொடரில் இந்திய அணியை யுவராஜ் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார். ஹர்பஜன் சிங், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு நாடுகளையும் நேசிக்கிறேன்: “நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்” என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.
விளையாட்டு தேசங்களை இணைக்கிறது: “விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்? முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும். இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்ளதான் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் பாழ் ஆக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உடன் விளையாட விருப்பமில்லை என்றால் சனிக்கிழமை அன்று இந்திய வீரர்கள் ஏன் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.