மெக்கே: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 78 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 87 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.
டோனி டி ஸோர்ஸி 38, வியான் முல்டர் 26, கேசவ் மகாராஜ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களை வீழ்த்தினார். சேவியர் பார்ட்லெட், நேதன் எலிஸ், மார்னஷ் லபுஷேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 278 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் 74 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார்.
டிராவிஸ் ஹெட் 6, கேப்டன் மிட்செல் மார்ஷ் 18, கேமரூன் கிரீன் 35, மார்னஷ் லபுஷேன் 3, அலெக்ஸ் கேரி 13, ஆரோன் ஹார்டி 10 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி நிகிடி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
நந்த்ரே பர்கர், செனுரன் முத்துசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக லுங்கி நிகிடி தேர்வானார். 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை தென் ஆப்பிரிக்க அணி 5-வது முறையாக தொடர்ச்சியாக கைப்பற்றியுள்ளது.
கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (24-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.