லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் பிரக்ஞானந்தாவுடன், உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரான மேக்னஸ் கார்ல்சன் மோதினார். இந்த சுற்றில் 39-வது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
இதன் மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்தச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டுசட்டோரோவ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கால் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.