லண்டன்: இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டுகளை பும்ரா விரைந்து கைப்பற்றினார். இதில் ரூட் மற்றும் வோக்ஸ் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருந்தார். ஸ்டோக்ஸ் 44, ரூட் 104 ரன்களிலும், வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அப்போது இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மித், 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆர்ச்சர் 4 மற்றும் கார்ஸ் 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. ஓவருக்கு 3.44 ரன்கள் வீதம் இங்கிலாந்து அணி ரன் எடுத்துள்ளது. இந்த இன்னிங்ஸை இங்கிலாந்து அணி மிகவும் நிதானமாக ஆடியது. தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஆர்ச்சர் கைப்பற்றி உள்ளார்.