லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி இருந்தனர். அதில் ரூட், ஸ்மித், ஸ்டோக்ஸ், பஷீர் விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றி அசத்தினார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் அரை சதம் விளாசி இருந்தனர். பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதோடு சேர்த்து 9 முறை முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் ஒரே ரன்களை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கே.எல்.தரப்பில் ராகுல் சதம் விளாசினார். ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா அரை சதம் விளாசி இருந்தனர்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு ஓவருக்கு அந்த அணி 2 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஜூலை 13) தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே பும்ராவும், சிராஜும் தரமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இம்சித்தனர். அதன் பலனாக பென் டக்கெட் மற்றும் ஆலி போப் விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார்.
ஸாக் கிராவ்லியை நித்திஷ் குமார் ரெட்டி வெளியேற்றினார். ஹாரி புரூக்கை ஆகாஷ் தீப் போல்ட் செய்தார். மதிய உணவு நேர பிரேக்கின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அதன் பின்னர் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
96 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட்டை போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். தொடர்ந்து ஜேமி ஸ்மித் (8 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (33 ரன்கள்) ஆகியோரையும் வாஷிங்டன் சுந்தர் போல்ட் செய்தார். பின்னர் பிரைடன் கார்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இறுதியாக ஷோயப் பஷீர் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார். 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 193 ரன்கள் தேவை. இந்த இலக்கை சுமார் 110 ஓவர்களில் இந்திய அணி எட்ட வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வாஷிங்டன் சுந்தர் கவனம் ஈர்த்தார்.