ஜிம்பாப்வேயிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்து லாரா ரெக்கார்டை முறியடிக்க விரும்பவில்லை என்று டிக்ளேர் செய்தார். இது கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதாகும், இனி அந்த வாய்ப்பு முல்டருக்குக் கிடைக்குமா என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்ட்டை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த பென் ஸ்டோக்ஸ், “வேறு கேப்டனாக இருந்து இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை. வியான் முல்டர்தான் 367 ரன்களில் இருக்கிறார், அவர்தான் கேப்டன் ஆனாலும் இம்முடிவை எடுத்திருக்கிறார். இது ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட்தான்.
அந்த 400 ரன்கள் சாதனை பிரையன் லாராவிடம்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக நினைவு. ஆனால் இன்னொரு வாய்ப்பு இது போன்று முல்டருக்குக் கிடைக்குமா? ஸ்போர்டிங் ஸ்பிரிட் படி சரி.” என்றார்.
கிறிஸ் கெய்ல் சாடல்… ஆனால் கிறிஸ் கெய்ல் முல்டரின் முடிவை ஏற்கவில்லை, “முல்டர் பதற்றமடைந்தார், அதனால் தவறு செய்தார். லாராவின் சாதனையை முறியடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டு முல்டர் தவறு செய்து விட்டார். அவர் ஆடியிருந்தாலும் அந்த மைல்கல்லை எட்டியிருப்பாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் மைல்கல்லை எட்ட முயற்சி செய்யாமலேயே விடுவது நிச்சயம் தவறுதான் என்றே கூறுவேன். அதாவது வாழ்வில் ஒருமுறை கிடைக்கக் கூடிய வாய்ப்பு, 400 ரன்கள் வாய்ப்பு எப்போதும் கிடைக்குமா? நல்ல வாய்ப்பை உதறித்தள்ளி விட்டாயே முல்டர். பெரிய தவறு செய்து விட்டாயே முல்டர்.
367 ரன்கள் வரை வந்து விட்டாய்…இயல்பாகவே நீங்கள் 400 ரன்கள் மைல்கல்லை நோக்கி முயற்சி செய்திருக்க வேண்டும். சாதனையை நோக்கிய முன்னெடுப்பு செய்திருக்க வேண்டும். நீங்கள் லெஜண்ட் ஆக வேண்டும் என்றால் எப்படி லெஜண்ட் ஆவீர்கள், சாதனைகளை உடைப்பதனால்தானே? லெஜண்டானால் சாதனைகள் வந்தவண்ணம் இருக்கும். ” என்றார்.