முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.
முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பேட் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
அந்த அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மாற்று வீரராக இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். 9 ஃபோர்கள், 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். திலக் வர்மா, 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா, 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ரோஹித் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பு மற்றும் சூர்யகுமார் யாதவ் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஒன்றையும் குஜராத் நழுவவிட்டது. இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் என்ற பெரிய இலக்கை குஜராத் அணி விரட்டுகிறது.