2027 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் உள்ள இந்திய அணி நிர்வாகம் கடினமான ஓட்டப் பந்தயமான பிராங்க்கோ டெஸ்ட்டை இப்போது அறிமுகப்படுத்துவது ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியிலிருந்தும் ஒழித்துக் கட்டத்தான் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான ஃபிட்னெஸ் டெஸ்ட் என்றால் பிராங்க்கோ டெஸ்ட் என்பது ரக்பி போட்டித் தேர்வுக்கான டெஸ்ட் ஆகும். ரக்பி போட்டிகள் குறைந்த நேரமே நடக்கும் விளையாட்டாகும். கிரிக்கெட்டில் பெரிய அளவில் மூச்சுக்குழாய் தாங்கும் டெஸ்ட்களெல்லாம் தேவையே இல்லை. இந்த காமெடி யோசனையை யார் தந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த பிராங்க்கோ டெஸ்ட் நுரையீரலை எரித்து விடும் என்று இதனை சிறுவயதில் பயிற்சி செய்த ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸும் எச்சரித்துள்ளார்.
இந்த டெஸ்ட்டில் வீரர்கள் சுமார் 1,200 மீ தூரம் இடைவிடாமல் ஓட வேண்டுமாம். கிரிக்கெட் வீரர்கள் என்ன தடகள வீரர்களா? இப்போது இந்திய அணி நிர்வாகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிராங்க்கோ டெஸ்ட்டில் 2 கிமீ தூரம் வரை ஓட வேண்டுமாம். மூச்சுக்குழல் எவ்வளவு தாங்குகிறது என்ற சோதனையாம் இது. ‘இது என்ன வீரர்களுக்கு வந்த சோதனை’ என்று பலரும் அங்கலாய்த்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா, விராட் கோலி இன்னும் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. இத்தருணத்தில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் இவர்களை ஒழிக்கத்தானோ என்ற ஐயமும் ஒருசேர பலருக்கும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மனோஜ் திவாரி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறியது: “2027 ஐசிசி உலகக்கோப்பைத் திட்டங்களிலிருந்து விராட் கோலியை இவர்களால் ஒதுக்கி வைக்க முடியாது ஆகவேதான் ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து பிராங்க்கோ டெஸ்ட் அறிமுகம் செய்துள்ளார்கள் போல் நான் சந்தேகிக்கிறேன்.
நான் இந்திய கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வருபவன். சில நாட்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராங்கோ டெஸ்ட் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்காகத்தான் என்று நான் ஐயுறுகிறேன்.
ரோஹித் சர்மா அணியில் இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏன் உங்கள் புதிய கோச் கம்பீர் தன் பயிற்சிக்காலத்தைத் தொடங்கும் போதே பிராங்கோ டெஸ்ட்டை அறிமுகம் செய்திருக்கலாமே? இப்போது ஏன்? அதனால்தான் ரோஹித் சர்மாவை கருத்தில் கொண்டு பிராங்கோ டெஸ்ட்டை கொண்டு வந்துள்ளனர்.
இந்த பிராங்க்கோ டெஸ்ட் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இப்போது ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை. ரோஹித் சர்மாவுக்கு இது கடினம். பிராங்கோ டெஸ்ட் மூலம் அவர் நிறுத்தப்படுவார் என்றே நான் சந்தேகம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் மனோஜ் திவாரி.