மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. 2-வது புதிய பந்தை இங்கிலாந்து அணி கையில் எடுத்த நிலையில் 2-வது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சிறந்த நீளத்தில் வீசிய பந்தை ஜடேஜா கிரீஸுக்குள் நின்றபடி தடுப்பாட்டம் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு 2-வது சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் கேட்ச் ஆனது.
40 பந்துகளை சந்தித்த ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குருடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 94.1-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த ஷர்துல் தாக்குர் 88 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கல்லி திசையில் அடித்த போது பென் டக்கெட்டின் அபார கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் வோக்ஸ் பந்தில் வலது காலில் காயம் அடைந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறி இருந்த ரிஷப் பந்த் களமிறங்கினார். தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் 90 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் தூக்கி அடித்த போது கிறிஸ் வோக்ஸிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரரான அன்ஷுல் கம்போஜ் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். காயம் காரணமாக வலியுடன் விளையாடிய ரிஷப் பந்த், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 111-வது ஓவரில் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். தனது 18-வது அரை சதத்தை கடந்த ரிஷப் பந்த் 75 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
கடைசி வீரராக ஜஸ்பிரீத் பும்ரா 4 ரன்களில் அவுட் ஆனார். ஜோப்ரா ஆர்ச்சர் லெக் திசையில் வீசிய பந்தை ஜஸ்பிரீத் பும்ரா விளாச முயன்ற போது கையுறையில் பட்டு ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் ஆனது. முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் 5 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். கிறிஸ் வோக்ஸ், லியாம் டாவ்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பென் டக்கெட்டும், ஸாக் கிராவ்லியும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸாக் கிராவ்லியை 84 ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார்.
தனது இரண்டாவது ஸ்பெல்லில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் டக்கெட் விக்கெட்டை அன்ஷுல் கம்போஜ் கைப்பற்றினார். டக்கெட் 94 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. ஓவருக்கு 4.89 என்ற ரன் ரேட்டில் இங்கிலாந்து அணி ரன் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் பின்தங்கியுள்ளது இங்கிலாந்து. ஜோ ரூட் 11, ஆலி போப் 20 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.
16 விக்கெட்கள் கைப்பற்றிய ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் தொடர் ஒன்றில் அவர், அதிக விக்கெட்கள் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2013-ல் ஆஷஸ் தொடரில் அதிகபட்சமாக 15 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்: இந்திய அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 8 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் 5 விக்கெட்களை சாய்த்துள்ளார். கடைசியாக அவர், 2017-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.
7 இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், இந்தியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இதுவரை 8 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இதில் 7 விக்கெட்கள் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவர்.
இங்கிலாந்தில் அதிக ரன்: இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் அவர், இதுவரை 479 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதற்கு முன்னர் 1998-ம் ஆண்டு இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 464 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த வரிசையில் ஜேமி ஸ்மித் 415 ரன்கள் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் லெவனில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இடம் பெறுவது இது முதன்முறையாகும்.
அதிக சிக்ஸர்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரேந்திர சேவக்கின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 90 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா (88), எம்எஸ் தோனி (78), ரவீந்திர ஜடேஜா (74) ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து மண்ணில் 9 அரை சதம்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 54 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து மண்ணில் இது அவரது 9-வது அரை சதம் ஆகும். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக அரை சதங்கள் அடித்திருந்த தோனியின் (8 அரை சதங்கள் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார்.