புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டிருந்தார். அவர், காலில் காயமடைந்திருந்த போதிலும் வீல் சேரில் வந்து அணிக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிலையில் ராகுல் திராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளதாக அந்த அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது எக்ஸ் வலைதள பதிவில்”ராகுல் திராவிட் பல ஆண்டுகளாகராயல்ஸ் அணியின் பயணத்தில் மையமாக இருந்து வருகிறார். அவரது தலைமை ஒரு தலைமுறை வீரர்களிடம் செல்வாக்கை பெற்றுள்ளது, அணிக்குள் வலுவான மதிப்புகளை விதைத்துள்ளது, மேலும் அணியின் கலாச்சாரத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அணியின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற மதிப்பாய்வில் ராகுல் திராவிட்டுக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது, ஆனால் அதை ஏற்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், வீரர்களுக்காகவும் அவர், செய்த சேவைக்கு அணி சார்பாகவும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விலகி சிஎஸ்கேவில் இணைவதாக வதந்திகள் பரவிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளது.
விலகலுக்கு காரணம் என்ன? –2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடற்தகுதி பிரச்சினையில் சிக்கினார். இதனால் அவர், பல ஆட்டங்களில் விளையாடவில்லை. அந்த நேரங்களில் அதிரடி பேட்ஸ்மேனான ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். எனினும் அவர், கேப்டன்ஷிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அணியில் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோர் இருக்கும் போது ரியான் பராக் முன்னிலைப்படுத்தப்பட்டது விவாதங்களை உருவாக்கியது. இந்த விஷயத்தில் சஞ்சு சாம்சன், ராகுல் திராவிட் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது. கடந்த சீசனில் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்ததால் வரும் 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அணியை கட்டமைக்கும் பணியில் ராஜஸ்தான் அணி ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் ராகுல் திராவிட் விலகி உள்ளார். அவர், விலகலுக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக திராவிட்டின் விலகலுக்கு புதிய கேப்டன் தேர்வு காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
மேலும் அணி தேர்வு மற்றும் திட்டங்கள் அமைப்பதில் இருந்து திராவிட்டை விலக்கி வைக்கும் வகையிலேயே அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து மாற்றி உயர் பதவி வழங்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முன்வந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் விருப்பம் இல்லாமல் ராகுல் திராவிட் விலகி உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.