பெங்களூரு: ரமலான் நோன்பு மாதத்தின்போது உற்சாக பானம் பருகியது சர்ச்சையான நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார். தற்போது துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக அவர் விளையாடி வருகிறது. இந்தச் சூழலில் ரமலான் நோன்பின்போது உற்சாக பானம் பருகியது குறித்து ஷமி பேசியுள்ளார்.
“துபாயில் 42 முதல் 45 டிகிரி வெப்பத்தை எதிர்கொண்டு விளையாட வேண்டிய அசாத்திய சூழல் இருந்தது. அது மாதிரியான சூழலில் உடல்நலனும், செயல்பாடும் தான் முக்கியம். ஏனெனில், தேசிய அணி சார்பாக நாம் விளையாடுகிறோம். இதற்கு இஸ்லாமிய விதியில் விலக்கு உண்டு. நாம் தேசிய அணிக்காக விளையாடும்போதோ அல்லது பயணிக்கும் போதோ இந்த விலக்கு பொருந்தும். சிலர் அதை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் சிலருக்கு ரோல் மாடலாக இருக்கலாம். அது எனக்கு புரிகிறது. இருந்தாலும் நான் விளையாடும் சூழலை பார்க்க வேண்டும். இஸ்லாமிய விதிப்படி நோன்பினை தவறவிடும் போது அதை ஈடு செய்ய அபராதம் அல்லது வேறொரு நாளில் நோன்பு இருக்கலாம். அது ரமலான் மாதம் முடிந்த பிறகும் கூட செய்யலாம். அதை நான் செய்தேன். எல்லோரும் அதை செய்கிறார்கள்” என ஷமி கூறியுள்ளார்.
புனித ரமலான் மாத நோன்பினை நோற்காமல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்துள்ளார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். ஷமியின் செயல் பேசுபொருளான நிலையில் அது குறித்து இப்போது அவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.