கிரிக்கெட் களத்தில் களமாடும் ஒவ்வொரு வீரருக்கு பின்பும் உத்வேகம் தரும் கதை ஒன்று இருக்கும். அந்த வீரர்களில் ஒருவர்தான் கனிபாலன். யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே என்ற பாணியில் கிரிக்கெட் பயிற்சி பெற்றவர். ஸ்டம்பர் பந்தை கொண்டு தெரு கிரிக்கெட் விளையாட தொடங்கி இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார்.
தனது கிரிக்கெட் கனவுக்கு கரோனா பரவல் காலம் தடையாக இருந்த போது இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பிரதிநிதியாகவும் பணியாற்றி உள்ளார். இப்போது இன்ஸ்டாவில் தனது கிரிக்கெட் டிப்ஸ் மூலம் பலரையும் ஈர்த்துள்ளார். ‘ஜேக் கோச்’ என்ற பெயரில் உள்ள அவரது இன்ஸ்டா பக்கத்தை சுமார் 67.3 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 27 வயதான அவர், கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎல் 9-வது சீசனுக்கான ஏலத்தின் போது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அது வாய்ப்புக்காக நெடுநாள் காத்திருந்த அவரது விடாமுயற்சிக்கு பலனாக அமைந்தது.
ஸ்டம்பர் பந்து டூ டிஎன்பிஎல்: திருநெல்வேலியில் பிறந்த கனிபாலன் இப்போது சென்னையில் உள்ள திருவொற்றியூரில் வசித்து வருகிறார். “ஸ்டம்பர் பந்துகளை கொண்டு நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அங்கிருந்துதான் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் ஆரம்பித்தது. சென்னையில் நான் விளையாட அப்பாவும், அம்மாவும் மறுப்பார்கள். அதனால் பள்ளியின் கோடைகால விடுமுறை நாட்களில் திருநெல்வேலியில் கிரிக்கெட் விளையாடுவேன்.
பின்னர் தொழில்முறை கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற ஆர்வம் வந்தது. ஆனால், குடும்ப சூழல் காரணமாக கிரிக்கெட் கிட் கூட வாங்க முடியவில்லை. அதனால் மைதானத்தில் கிரிக்கெட் கிட் உடன் வருபவர்களை பின்தொடர்ந்து சென்று, அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என உன்னிப்பாக கவனிப்பேன்.
நான் தொழில்முறை கிரிக்கெட் வீரராக பயிற்சி பெறவும், மாறவும் காரணம் எனது தம்பிதான். எனக்காக அவன்தான் வீட்டில் அடம்பிடித்து என்னை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டான். அங்கிருந்துதான் கிரிக்கெட் பந்தில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கோடை கால பயிற்சியில் சேர்ந்தேன். இருந்தாலும் அகாடமியில் என்னால் தொடர்ந்து பயிற்சி பெற முடியவில்லை.
பிறகு யூடியூப் வீடியோக்களை பார்த்து பேட்டிங் பயிற்சி பெற்றேன். அதன் மூலம் எனது பேட்டிங் திறனை பட்டை தீட்டினேன். இதையேதான் கிரிக்கெட் அகாடமிகள் செய்து வருகின்றன என்ற புரிதலை பெற்றேன்.
எனது டீம் மெட்டின் அப்பாதான் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடருக்கு என் பெயரில் விண்ணப்பம் பூர்த்தி செய்தார். அவர் என்னை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். நான் மிடில் ஆர்டரில் ஆடும் பேட்ஸ்மேன். அதன் பின்னர் டிரையலுக்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த சூழலில் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்தேன். ஒவ்வொரு செஷனுக்கும் 400 முதல் 500 பந்துகளை ஸ்டம்புக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்து அந்த டெக்னிக்கை மேம்படுத்தினேன். பின்னர் டிரையலில் சிறப்பாக செயல்பட்டு அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றேன்.
4-வது டிவிஷன் கிரிக்கெட்டில் சென்னை பிஎன்டி அணிக்காக விளையாடி மூன்று அரை சதம் பதிவு செய்தேன். அது தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த நம்பிக்கையை எனக்கு கொடுத்தது. பின்னர் எனக்கு கிடைக்காத வழிகாட்டுதலை என்னை போலவே கனவோடு இருக்கும் இளம் வீரர்களுக்கு கடத்த வேண்டும் என விரும்பினேன். இப்போது வீடியோ மூலமாகவும் நேரடியாகவும் எனக்கு தெரிந்த நுணுக்கங்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். இந்த சீசனில் திருப்பூர் அணிக்காக டிஎன்பிஎல் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறந்த அனுபவமாக உள்ளது” என கனிபாலன் கூறியுள்ளார்.