நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரன ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்ரினுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் ஜேக்கப் ஃபியர்ன்லியையும், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷின்தாரா மோச்சிசுகியையும், 10-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.
9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 76-ம் நிலை வீரரான போலந்தின் கமில் மஜ்சாக்குடன் மோதினார். 4 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கமில் மஜ்சாக் 2-6, 6-7 (4-7), 6-4, 7-5, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் போராடி கரேன் கச்சனோவை தோற்கடித்து 3-வது சுற்றில் கால்பதித்தார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 7-6 (8-6), 6-3, 5-7, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் நுனோ போர்கஸையும், 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 6-3, 5-7, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டிரிஸ்டன் போயரையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் சுசன் லாமென்ஸையும், 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வெகிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
11-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-6 (7-0), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவையும், 15-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் தரியா கஸட்கினா 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவையும், 23-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்டையும் தோற்கடித்து 3-வது சுற்றில் நுழைந்தனர்.