நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் ஜன்னிக் சின்னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஜன்னிக் சின்னர், 10-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எதிர்கொள்கிறார். லோரென்சோ முசெட்டி 4-வது சுற்றில் 6-3, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ஜேமி முனாரை தோற்கடித்தார்.
8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் 435-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் லியாண்ட்ரோ ரீடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். 25-ம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 4-வது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 23-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகவுடன் மோதினார். இதில் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கோ கோ காஃபை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார். கால் இறுதி சுற்றில் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதுகிறார்.
11-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்சோவா, 4-வது சுற்றில் 6-3, 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் 27-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தினார். 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதுகிறார். 8-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிசிமோவா 4-வது சுற்றில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் 18-ம் நிலை வீராங்கனையான பிரேலிலின் பீட்ரிஸ் ஹடாட் மையாவை தோற்கடித்தார்.