நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று (24-ம் தேதி) தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்குவது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும்.
நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், அமெரிக்காவின் முன்னணி வீரர்களான பென் ஷெல்டன், டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்சஸ் தியாஃபோ உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் பட்டம் வெல்ல மோதுகின்றனர்.
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, இந்த ஆண்டில் இரு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள அமெரிக்காவின் கோ கோ காஃப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, எம்மா நவர்ரோ, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் பட்டம் வெல்ல மல்லுக்கட்ட உள்ளனர்.
தொடக்க நாளான இன்று நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலர் முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன், தரவரிசையில் 136-வது இடத்தில் உள்ள பெரு வீரர் இக்னாசியோவுடன் மோதுகிறார். 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை எதிர்கொள்கிறார்.
4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், சகநாட்டைச் சேர்ந்த 101-ம் நிலை வீரரான எமிலியோ நவாவுடன் மோதுகிறார். 2021-ம் ஆண்டு சாம்பியனான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், பிரான்ஸின் பெஞ்ஜமின் போன்ஸியை எதிர்கொள்கிறார். இதற்கு முன்னர் இருவரும் 2 முறை மோதி உள்ளனர். இதில் இரண்டிலும் போன்ஸி வெற்றி பெற்றிருந்தார்.
2022-ம் ஆண்டு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் 66-ம் நிலை வீரரான ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார். 5-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர், 206-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஃபெடரிகோ அகஸ்டின் கோம்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 109-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் ரெபேக்கா மசரோவாவுடன் மோதுகிறார். 2021-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, தகுதி நிலை வீராங்கனையான ஜப்பானின் எனா ஷிபஹாராவை எதிர்கொள்கிறார்.
4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 104-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் மாயர் ஷெரிப்புடன் மோதுகிறார். 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 168-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் டெஸ்டானி ஐயாவாவுடனும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ, 202-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யாஃபான் வாங்குடனும் மோதுகின்றனர்.
5-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 71-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசியா பார்க்ஸுடனும், 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 73-ம் நிலை வீராங்கனையான மெக்சிகோவின் ரெனாட்டா ஜராசுவாவுடனும் மோத உள்ளனர்.
யுஎஸ் ஓபன் தொடரில் இம்முறை பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.747 கோடியாகும். இது கடந்த ஆண்டு பரிசுத் தொகையை விட 20 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் மற்ற கிராண்ட் ஸ்லாம் தொடரை விட அதிக பரிசுத் தொகை வழங்கும் தொடராக வரலாற்று சாதனை படைக்க உள்ளது யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர். ஏனெனில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பரிசுத் தொகை ரூ.717 கோடியாகவும், பிரெஞ்சு ஓபன் பரிசுத் தொகை ரூ.476 கோடியாகவும், விம்பிள்டன் பரிசுத் தொகை ரூ.551 கோடியாகவும் மட்டுமே உள்ளது.
இம்முறை யுஎஸ் ஓபன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.41.5 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திப்பவர் ரூ.20.75 கோடியை பரிசாக பெறுவார். அரை இறுதியில் தோல்வி அடைபவர்கள் தலா ரூ.10.37 கோடியையும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்கள் ரூ.4.15 கோடியையும் பெறுவார்கள். முதல் சுற்று முதல் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை தோல்வி அடைந்து வெளியேறுபவர்களும் கணிசமான பரிசுத் தொகையை பெறுவார்கள்.