டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 49 ஓவர்களில் 280 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லீவிஸ் 62 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 55, ராஸ்டன் சேஸ் 53, மோதி 31 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாகீன் ஷா அப்ரீடி 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
281 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹசன் நவாஸ் 54 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், ஹூசைன் தலத் 41 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ரிஸ்வான் 53, பாபர் அஸம் 47 ரன்களில் வெளியேறினர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.