ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போடடியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆசிப் ஷேக் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சந்திப் ஜோரா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 17.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 21, அக்கீம் அகஸ்டே 17, அமிர் ஜாங்கோ 16 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
நேபாளம் அணி சார்பில் முகமது ஆதில் ஆலம் 4 விக்கெட்களையும், குஷால் பர்தெல் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நேபாளம் அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக டி 20 தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும்.
தொடரை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள், ஐசிசி முழுநேர உறுப்பினர் இல்லாத அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த வகையில் இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 85 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தது.