அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்களில் வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து மூன்றாம் (சனிக்கிழமை) நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இதில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார். சிராஜ் 3, குல்தீப் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஜடேஜா பெற்றார். இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.