துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் டாஸின் போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும் டாஸ் நிகழ்வின் போது விளையாடும் லெவன் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்கள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளாமல் மேட்ச் ரெஃப்ரீயான ஐசிசி பேனலை சேர்ந்த ஆண்டி பைகிராஃப்ட்டிடம் வழங்கினர்.
போட்டி முடிவடைந்ததும் இந்த செயல்களுக்கு பாகிஸ்தான் அணியின் மேலாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தது. மேலும் மேட்ச் ரெஃப்ரீயான ஆண்டி பைகிராஃப்ட்டை நடப்பு தொடரில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்தது.
இதற்கிடையே பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று மோதிய ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட்டுக்கு பதிலாக மாற்று ரெப்ஃரீயான ரிச்சர்ட்சனை நியமிக்க வேண்டும் இல்லையென்றால் போட்டியை புறக்கணிப்போம் என நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணி 2-வது முறையாக ஐசிசி-க்கு மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் இதையும் ஐசிசி மறுத்தது. ஆண்டி பைகிராஃப்ட் மேட்ச் ரெஃப்ரீயாக தொடர்வார் என உறுதியாக தெரிவித்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் நடைபெற இருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்தது. ஆனால் அந்த அணி வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோத இருந்தன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
ஆனால் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது எக்ஸ் வலைதள பதிவில் இருந்து இந்த ஆட்டத்தின் அட்டவணையை திடீரென நீக்கியது. இதனால் பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகினால் 140 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் தகவல்கள் வெளியானது.
போட்டி 8 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில் 7.30 மணி வரை பாகிஸ்தான் அணி வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு புறப்படவில்லை. இதற்கிடையே ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஸின் நக்விவை அழைத்து ஆண்டி பைக்ராஃப்ட் விதிமுறைகளை பின்பற்றியே நடந்துள்ளார். அதனால் அவரே போட்டி நடுவராக நீடிப்பார் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி, முன்னாள் தலைவர்களான ரமீஸ் ராஜா, நஜாம் சேதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் எனவும், பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்துக்கு புறப்பட்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதை ஏற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இரவு 8.30 மணிக்கு மேட்ச் ரெஃப்ரீ ஆண்டி பைகிராஃப்ட் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முஹம்மது வசீம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஐக்கிய அரபு அமீரகம் விரட்டியது. அந்த அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.