
கொல்கத்தா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவாக கொல்கத்தா வந்து சேர்ந்தனர்.
இங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்தான் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம் பெற்று இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா வந்து தங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைந்தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்ளிட்ட சில வீரர்களும், உதவி பயிற்சியாளர்களும் வந்திருந்தனர்.

