புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
“நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார்.
இந்த நிலையில் பிரிவதாக அறிவித்த 19 நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் சாய்னா நேவால். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ – மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சாய்னா நேவாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிறு வயது முதலே சாய்னாவும் காஷ்யப்பும் இணைந்து கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்தவர்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற அடையாளத்தின் மூலம் சாய்னா கவனம் ஈர்த்தார். ஆடவர் பிரிவில் பருபள்ளி காஷ்யப் டாப் 10 இடத்தை பிடித்தவர். 2014-ல் காமன்வெல்த்தில் தங்கம் வென்றார். சாய்னா இரண்டு முறை காமன்வெல்த்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.