கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசினர்.
ஒரு கட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால் கடைசி 4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்களை தாரைவார்த்து வெறும் 23 ரன்களையே சேர்த்தது. ரோவ்மன் பவெல் 1, ஆந்த்ரே ரஸ்ஸல் 8, ஷெர்பேன் ரூதர்போர்டு 0, ஜேசன் ஹோல்டர் 0 ரன்களில் நடையை கட்டினர். அதிரடியாக விளையாடி வந்த ஹெட்மயர் கடைசி 3 பந்துகள் மீதம் இருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் டுவார்ஷுயிஸ் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 190 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், அறிமுக வீரரான 23 வயது ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவன் 27 பந்துகளில், 6 சிக்ஸர்களுடன் 50 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
ஆட்ட நாயகனாக மிட்செல் ஓவன் தேர்வானார். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (22-ம் தேதி) காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.மிட்செல் ஓவன்