பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் மிக அருமையாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய டி20 அணியில் மீண்டும் அழைக்கப்பட தகுதியானவரே என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாளை, செவ்வாய்க் கிழமை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறார் ஆகாஷ் சோப்ரா. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் ஓர் அற்புதமான கேப்டனாகவும் அய்யர் உருவெடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் இப்போதைய சிறந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்தான். எனவே அணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் கேப்டனுக்கு உதவியாக ஸ்ரேயஸ் இருப்பது இந்திய அணிக்கு வலுசேர்க்கும்.
ஸ்ரேயஸ் அய்யருக்கும் 3 வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே ஸ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்வியாக இருந்தாலும் ஸ்ரேயஸ் அய்யர் அணிக்குள் அழைக்கப்பட வேண்டும் என்பது இங்கிலாந்து தொடரிலிருந்தே பேச்சாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “சாம்பியன்ஸ் டிராபியிலேயே ஸ்ரேயஸ் அய்யரின் ஆட்டத்தைப் பார்த்தோம். மிடில் ஓவர்களில் இவரை விட சிறந்த இந்திய வீரர் ஒருவரும் இருக்க முடியாது.
ஸ்ரேயஸ் அய்யர் எதிரணியைத் தாக்குதல் ஆட்டத்தின் மூலம் முறியடிப்பவர். அய்யர் தன் இஷ்டத்துக்கு நினைத்தால் பவுண்டரி அடிக்கும் திறமை கொண்டவர். இதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் வீரரின் அழுத்தத்தைக் குறைத்து விடுவார்.” என்றார்.
ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் அய்யர் 600 ரன்களுக்கும் மேல் குவித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 175 என்பது குறிப்பிடத்தக்கது. 39 சிக்சர்களை அய்யர் விளாச பஞ்சாப் ரன்னர்களாக ஐபிஎல் தொடரில் முடிந்தது.
இதை அங்கீகரிக்கும் ஆகாஷ் சோப்ரா, “இதுதான் ஸ்ரேயஸ் அய்யரின் பெரிய ஐபிஎல் தொடராகும். டி20 அணித்தேர்வில் ஐபிஎல் ஆட்டத்திறனே அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என்று பட்டியல் நீளும். இந்த வரிசையில் ஸ்ரேயஸ் அய்யரும் இந்திய அணிக்கு ரீகால் செய்யத் தகுதியுடையவரே.
ஸ்ரேயஸ் அய்யருக்காக நாம் பேசினாலும் உண்மை என்னவெனில் திலக் வர்மா 3 அல்லது 4-ம் நிலையில் இறங்குவார். அதுவும் திலக் வர்மா 3-ம் நிலையில் இறங்க தொடங்கிய பிறகே அவரை நிறுத்த முடியவில்லை. இவரது புள்ளி விவரங்களும் அபாரமாக உள்ளதால் இவருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இடது , வலது பேட்டர்களின் சேர்க்கையே பலரும் விரும்புவார்கள்.” என்றார் ஆகாஷ் சோப்ரா.
ஸ்ரேயஸ் அய்யர் கடைசியாக இந்திய டி20 அணியில் ஆடியது 2023 டிசம்பரில். இதுவரை 51 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஸ்ரேயஸ் அய்யர் 1104 ரன்களை 30.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.