மும்பை: வரும் 23-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இந்தவொரு மாற்றத்தை இந்திய அணி அவசியம் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த சூழலில் வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் நான்காவது போட்டி தொடங்க உள்ளது.
“இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 4 மற்றும் 5-வது நாள் பேட் செய்வது மிகவும் கடினம். ரன் குவிப்பதும் கடினம். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியது. ஆனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை சேர்க்க வாய்ப்பு இருந்தும் தவறவிட்டதாக நான் நினைக்கிறேன்.
அதனால் இந்திய அணி மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அணியில் கூடுதலாக ஒரு பவுலரை வைத்து விளையாடலாம். அதன் மூலம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றலாம் என கருதுகிறேன்” என ரஹானே தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பும்ரா விளையாடுவாரா? ரன் சேர்க்க தடுமாறும் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படுமா? குல்தீப் யாதவ் களம் காண்பாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.