புதுடெல்லி: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதன் பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரு ஆட்டங்களுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. தற்போது அனைவரது கவனமும் 25 வயதான கேப்டன் ஷுப்மன் கில் மீது திரும்பியுள்ளது. பிரகாசமான இளம் திறமைசாலியான அவர், பேட்டிங்கிலும், தலைமைத்துவத் திறனிலும் சிறந்து விளங்கியுள்ளார். ஆனால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியே ஒரு டெஸ்ட் கேப்டனாக அவரது பாதையை வரையறுக்கும். கேப்டனாக வளர்வதற்கு இது எளிதான சூழல் அல்ல. இதைவிட அதிகமான ஆபத்து இருக்க முடியாது.
இந்தியா எந்த மாதிரியான அணியாக இருக்க வேண்டும் என்று கில் வரையறுக்க வேண்டும். கேப்டன் தனது வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும், நோக்கத்தின் தெளிவாலும், தரநிலைகளாலும் ஒரு குறிப்பிட்ட பாணியை அமைக்க வேண்டும். அதாவது இது களத்தில் நேர்த்தியாக செயல்படுவதை பற்றியதாகும். பீல்டிங்கில் மீண்டும் மோசமாக செயல்படும் அணியாக இந்தியா இருக்கக் கூடாது. சிறந்த அணிகள் எப்போதும் களத்தில் சிறப்பாகவே செயல்படும். அவர்கள் எளிதாக ரன்களைக் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வாய்ப்புகளை தவறவிடவும் மாட்டார்கள். தேர்வுக்குழுவினரும், ஷூப்மன் கில்லும் போட்டியை வெல்லக்கூடிய அணியைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஷுப்மன் கில், தான் நம்பும் முக்கிய வீரர்களை அடையாளம் கண்டு, தெளிவான விளையாட்டுத் திட்டத்தை வகுக்க வேண்டும். மேலும், அதில் ஒவ்வொரு வீரர்களுக்குமான பணியை தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அந்த வீரர்களும் அறிந்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் எந்த இடத்துக்கு பொருந்துகிறார்கள் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
பெரும்பாலும், போராடும் அணிகளில், வீரர்கள் தாங்களாகவே இவற்றை சரிசெய்ய வேண்டியது இருக்கும். சிறந்த கேப்டன்கள் தகவல்களை பறிமாறிக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஷுப்மன் கில், அதில் ஒருவராக மாற வேண்டும். விரைவாகவும், பயிற்சியின் போதும், களத்திலும் அல்லது இடைவேளையின் போதும் ஓய்வு அறையிலும் தெளிவான, அமைதியான தகவல் தொடர்பு அவசியம். ஷுப்மன் கில் எப்போதும் அவரது மட்டையால் பேச முடியாது. அணியை சீரமைக்கும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அவர் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
சரியான அணுகுமுறையை வீரர்களிடம் விளக்க வேண்டும். பேட்ஸ்மேன்களை நேர்மறையாக விளையாடவும், பார்ட்னர்ஷிப்களில் கவனம் செலுத்தவும் கூறவேண்டும். பேட்ஸ்மேன் சிறந்த தொடக்கத்தை பெற்றால், பெரிய ஸ்கோரைப் பெறுவது முக்கியம். பந்துவீச்சை பொறுத்தவரையில், விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமல்ல, அழுத்தத்தை உருவாக்குவதும் முக்கியம் என்பதை பந்து வீச்சாளர்கள் அறிந்திருக்க வேண்டும். நல்ல பந்துகளை வீசுதல், நல்ல ஓவர்களை வீசுதல் மற்றும் நல்ல ஸ்பெல்களை வீசுதல் என செயல்பட்டு அழுத்தத்தை உருவாக்க வேண்டும். அழுத்தம் தவறுகளை உருவாக்குகிறது. இது மந்திரம் அல்ல, அது ஒரு செயல்முறை.
ஷுப்மன் கில் ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டனாக விரும்பினால். இதுதான் அவரது அதிகாரத்தை முத்திரை குத்துவதற்கான தருணம். பேட்டிங் மூலம் மட்டுமல்ல, அவரது கேப்டன்ஷிப் மூலமும் காட்ட வேண்டும். இதற்காக அவர், தரத்தை நிர்ணயிக்க வேண்டும். இதை மற்ற வீரர்களிடமிருந்தும் பெற வேண்டும். தனக்கான அணியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு வீரரும் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அறிந்து செயல்படுவார்கள்.
ஏனென்றால், கிரிக்கெட் என்பது ஹீரோக்களைப் பற்றியது அல்ல. அது பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை பற்றியது. அது அணி களைப் பற்றியது. மேலும் அது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சிறந்த திறனை வெளிக்கொண்டு வரும் கேப்டன்களைப் பற்றியது. கில் சிந்தனையுடனும் தெளிவுடனும் நோக்கத்தின் வலிமையுடனும் அணியை வழி நடத்தினால் அவர் இந்தத் தொடரை மட்டும் வடிவமைக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் வடிவமைப்பார். இவ்வாறு கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.