மான்செஸ்டர்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
ஏனெனில், தோல்வி அடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்கள் இந்திய அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், மான்செஸ்டர் போட்டியில் களமிறங்கவில்லை.
இந்த தொடரில் இதுவரை களமிறக்கப்படாத இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடையவில்லை. எனவே மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அன்ஷுல் கம்போஜ் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர், தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். அநேகமாக மான்செஸ்டர் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஷர்துல் தாக்குருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். முதல் டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட அவரிடம் இருந்து ஆல்ரவுண்டராக பேட்டிங், பந்துவீச்சில் எதிர்பார்த்த செயல் திறன் வெளிப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணி நிர்வாகம் களமிறக்க விரும்பினால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
பணிச்சுமை காரணமாக இந்தத் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிவு செய்திருந்த பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, மான்செஸ்டர் போட்டியில் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. முதல் போட்டியில் விளையாடிய அவர், 2-வது போட்டியில் களமிறங்கவில்லை.
இதன் பின்னர் 3-வது ஆட்டத்தில் விளையாடியிருந்தார். தற்போது காயம் காரணமாக மற்ற வீரர்கள் அவதிப்படுவதால் பும்ரா தொடர்ச்சியாக விளையாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ் செயல்படக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் இந்தத் தொடரில் இதுவரை ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் பேட்டிங்கை பலப்படுத்துவதற்காகவே இவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். நடப்பு தொடரில் 4 அரை சதங்களுடன் 327 ரன்கள் எடுத்துள்ள ஜடேஜா, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை கடுமையாக போராடினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு வலுவான செயல் திறன் வெளிப்படக்கூடும்.
607 ரன்கள் வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில்லும், தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கடந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறினர். இவர்கள் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். ஜெய்ஸ்வால், லார்ட்ஸ் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்து இருந்தார். இதனால் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வதில் ஜெய்ஸ்வால் புதிய அணுகுமுறையை கையாளக்கூடும்.
2 சதங்கள், ஒரு அரை சதம் உட்பட 375 ரன்கள் சேர்த்துள்ள கே.எல்.ராகுலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். 425 ரன்கள் சேர்த்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், லார்ட்ஸ் போட்டியின் போது கை விரலில் காயம் அடைந்திருந்தார். இதனால் மாற்று வீரராக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டிருந்தார்.
தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ரிஷப் பந்த் கடந்த இரு நாட்களாக பேட்டிங் பயிற்சியுடன் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். அவர், முழு உடற்தகுதியை எட்டி உள்ளது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
நடுவரிசையில் கருண் நாயர் தனது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கினாலும் அதை பெரிய அளவிலான ஸ்கோராக மாற்றத் தவறுகிறார். அவர், அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. மான்செஸ்டர் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் விளையாடும் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷிருக்கு பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 2017-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் அணிக்கு திரும்பி உள்ளார்.
மான்செஸ்டரில் எப்படி? – ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி கண்டது இல்லை. 5 ஆட்டங்களை டிரா செய்துள்ள இந்திய அணி, 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தது.
இந்த மைதானத்தில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் சதம் விளாசியிருந்தார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஓல்டு டிராஃபோர்டில் விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக தோனி 71 ரன்கள் சேர்த்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் முறையே 40 மற்றும் 46 ரன்கள் எடுத்திருந்தார்.
மழை பெய்யுமா? – மான்செஸ்டரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு ஆடுகளம் முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
‘பின்வாங்க மாட்டோம்’ – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும் போது, “களத்தில் நாங்கள் தொடங்க வேண்டிய விஷயங்களில் ஸ்லெட்ஜிங் கும் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. எந்தவொரு அணியும் இதை செய்யும் என கருதவில்லை. டெஸ்ட் தொடரில் எப்போதும் ஒரு சூடான தருணம் நிகழும். இது பெரிய தொடர், செயல் திறனை வெளிப்படுத்துவதில் இரு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கிறது.
நாங்கள் வேண்டுமென்றே களத்தில் வாக்குவாதம் செய்வதை ஆரம்பிப்பது இல்லை. ஏனெனில் இது களத்தில் எங்களது கவனத்தை திசை திருப்பிவிடும். ஆனால் எந்த ஒரு வகையிலும் நாங்கள் நிச்சயமாக ஒரு படி பின்வாங்க மாட்டோம். எந்தவொரு எதிர்ப்பையும் எங்களை எதிர்கொள்ள அனுமதிக்க மாட்டோம்” என்றார்.