சென்னை: மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று யு-19 மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மயிலாப்பூர் கிளப்பை சேர்ந்த என்.ஷர்வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்கில் எஸ்.வர்ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஹன்சினி (சென்னை), நந்தினி (எம்விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), புவனிதா (மதுரை), வர்னிகா (ஈரோடு) ஆகியோரும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
யு-19 ஆடவர் பிரிவில் சென்னை அச்சீவர்ஸ் கிளப்பை சேர்ந்த எஸ்.மேகன் 11-7, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் ஆகாஷ் ராஜவேலுவை (சிடிடிஎஃப்) வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாலமுருகன் (ஐடிடிசி), நிகில் மேனன் (எம்எஸ்டி), அக் ஷய் பூஷன் (எஸ்கே அகாடமி), உமேஷ் (ஆர்டிடிஹெச்பிசி), விஷ்ரூத் ராமகிருஷ்ணன் (எம்எஸ்டி), பி.பி.அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்), ஸ்ரீராம் (சென்னை அச்சீவர்ஸ்) ஆகியோரும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் சேலத்தில் இன்று தொடக்கம்
97-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது.
இந்த போட்டியை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் சேலம் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்துகின்றன. இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவர், மகளிர் பிரிவில் 50 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியானது வரும் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ள 64-வது தேசிய அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப்புக்கான தேர்வுப் போட்டியாக அமைந்துள்ளது.
சேலத்தில் இன்று தொடங்கும் போட்டியில் ராகுல் குமார் (100 மீட்டர் ஓட்டம்), தமிழரசு (100 மீட்டர் ஓட்டம்), கவுதம் (போல் வால்ட்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும், பரணிகா இளங்கோவன் (போல் வால்ட்), வித்யா ராம்ராஜ் (100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம்), பிரதிக் ஷா யமுனா (நீளம் தாண்டுதல்) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.இத்தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா தெரிவித்துள்ளார்.