துபாய்: இந்திய அணி உடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் துப்பாக்கிச் சூடு செய்வது போல் சைகை செய்து அரைசதம் கடந்ததை பாகிஸ்தான் அணி வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கொண்டாடினார். அவரது கொண்டாட்டம் சர்ச்சையான நிலையில். அது குறித்து தனது கருத்தை ஃபர்ஹான் வெளிப்படுத்தி உள்ளார்.
“அந்த தருணத்தின்போது அதை நான் செய்திருந்தேன். நான் அரைசதம் கடந்தால் பெரிதும் கொண்டாட மாட்டேன். ஆனால், ஆட்டத்தின்போது திடீரென அப்படி செய்யலாம் என நான் எண்ணியதால் அதைச் செய்தேன். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் நான் கருதவில்லை. அதுகுறித்து எனக்கு கவலையும் இல்லை. ஆக்ரோஷமான பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும். அது இந்திய அணிக்கு எதிராக மட்டுமல்ல, மற்ற அணிகளுடனும் அப்படித்தான் ஆட வேண்டும்” என ஃபர்ஹான் கூறியுள்ளார்.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி இருந்தது இந்திய அணி. இந்த தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அதில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 35 பந்துகளில் அரைசதம் எட்டினார். அக்சர் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அரைசதம் கடந்தார். அதை அவர் கொண்டாடியதுதான் சர்ச்சை ஆகியுள்ளது.
வழக்காக சதம் அல்லது அரைசதம் கடந்ததும் பேட்ஸ்மேன்கள் பேட்டை உயர்த்தி காட்டுவார்கள். சிலர் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். அது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால், ஃபர்ஹான், இந்தியா உடனான ஆட்டத்தில் அரைசதம் விளாசியதும் பேட்டை துப்பாக்கிச் சூடு செய்வது போல சைகை செய்தார். அதுதான் சர்ச்சையானது.
கிரிக்கெட் விளையாட்டில் ‘Gun Fire’ கொண்டாட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் தோனி, இலங்கையின் சமரவீரா, பாகிஸ்தானின் ஆசிப் அலி ஆகியோர் செய்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.