துபாய்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளையில் கேப்டன் ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தரவரிசையில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசியாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்திருந்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 731 புள்ளிகளுடன் அவர், முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா 728 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கும், நடுவரிசை பேட்டிங் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
பந்து வீச்சு தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 4-வது இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர், மேகன் ஸ்கட் ஆகியோர் முறையே 1 முதல் 3-வது இடங்களில் உள்ளனர்.