பெங்களூரு: மகளிர் உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை அளித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் கொழும்பு நகரில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனது கருத்தை தெரிவித்தார்.
“இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் தொடரை வெல்லும் சமமான வாய்ப்பை பெற்றுள்ளது. அந்த அளவுக்கு மகளிர் கிரிக்கெட்டின் தரம் மேம்பட்டுள்ளது. இதோடு இப்போது மைதானத்தின் அரங்குகளில் பார்வையாளர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அதை நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறோம்.
சொந்த நாட்டில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது ஸ்பெஷலானது. எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. எங்களுக்கான ஆதரவு மைதானத்தில் அதிகம் இருக்கும். எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.