துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது. அதிலும் பாகிஸ்தான் அணி உடன் இந்த தொடரில் இறுதிப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி வாங்க மறுத்தது. அதைத் தொடர்ந்து அவர் கோப்பையை கையோடு கொண்டு சென்றார். இது சர்ச்சையாகி உள்ளது. அதே நேரத்தில் கோப்பையே இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நமது ஆயுதப் படைக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தொடருக்கான எனது போட்டிக் கட்டணத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் என் நினைவுகளில் உள்ளீர்கள்” என கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி உடனான லீக் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அரசியல் ரீதியானது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி வசம் முறையிட்டது. தொடர்ந்து அவருக்கு அந்த போட்டிக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.