ஆஸ்திரேலிய பூர்வக்குடிச் சமூகத்திலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆடிய முதல் வீரரான ஜேசன் கில்லஸ்பி ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலிய தினம் என்று பலராலும் கொண்டாடப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.
வரலாறு என்ன? – ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ தேசிய தினமாகும். இது 1788-ம் ஆண்டு முதல் கடற்படை தரையிறங்கியதையும், சிட்னி கவ்வில் ஆர்தர் பிலிப் என்பவரால் கிரேட் பிரிட்டனின் யூனியன் கொடியை ஏற்றியதைக் கொண்டாடும் நாள்.
1788-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிதான் பிரிட்டனின் 11 கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய நாளாகும். இது ஆஸ்திரேலியாவை ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்த தினமாகும். இதில் குற்றவாளிகளை ஏற்றி கொண்டு வந்த கடற்படைக் கப்பல்கள் ஆறு. மற்ற கப்பல்களில் முதல் பிரிட்டன் குடியேறிகள் வந்திறங்கினர். இந்தக் கப்பல்கள் ஆர்தர் பிலிப்பின் தலைமையேற்று ஆஸ்திரேலியா வந்தது. நியூ சவுத் வேல்ஸை முதல் தண்டனைக் காலனியாக நிறுவப்பட்டது.
முதல் லேண்டிங் தினமாகிய ஜனவரி 26-ம் தேதியை ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடத் தொடங்கினர். 1988-ல் ஜனவரி 26-ம் தேதியை ஆஸ்திரேலிய தினமாக அனுசரிப்பது அதிகரித்தது. 1994-ல் அனைத்து மாநிலங்களும் பிரதேசங்களும் முதல் முறையாக ஜனவரி 26 அன்று ஒருங்கிணைந்த பொது விடுமுறையைக் கொண்டாடத் தொடங்கின.
இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய பூர்வக்குடி சமூகத்தின் வம்சாவளியைச் சேர்ந்த ஜேசன் கில்லஸ்பி ஜனவரி 26-ம் தேதி அனைவராலும் ஆஸ்திரேலிய தினமாக ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப்படும் தினமல்ல என்கிறார்.
“ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுவதை பலர் ஆதரிக்கும்போது, ‘எப்போதும் ஜனவரி 26 தான்’ என்று அவர்கள் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது உண்மையல்ல. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஜனவரி 26 என்ற ஒரு தேதி மட்டுமே ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடப்பட்டதில்லை என்பது தெரியவரும்.
உண்மையில் ஜனவரி 26-ம் தேதி மண்ணின் மைந்தர்களான பூர்வக்குடி, ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆழமான உண்மையான துயர நாளாகும். இதை பூர்வக்குடிகள் கொண்டாடக்கூடிய நாளாகக் கருதவில்லை. பெரும்பாலான மக்களுக்கு ஒரு துயரமான நாளாக ஜனவரி 26-ம் தேதி இருக்கும் போது ஆஸ்திரேலிய தினமாக அனுசரிக்கப்பட மற்ற தேதிகள் இருக்கின்றன. அதாவது அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக, கொண்டாடப்படும் நாளாக பல நாட்கள் இருக்கின்றன.
எங்களது வலுவான பன்மைத்துவக் கலாச்சார வரலாறு கொண்ட நாட்டில், பலதரப்பட்ட பின்னணிகள் கொண்ட மக்கள் தொகுதியினர் வாழும் நாட்டில் ஏகப்பட்ட பூர்வக்குடி கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் இருந்திருப்பார்கள் என்றே நான் கருதினேன். அதனால் நான் தான் முதல் பூர்வக்குடி கிரிக்கெட் வீரராக இருக்க முடியாது என்று இத்தனை நாளாக வெள்ளந்தியாக நினைத்துக் கொண்டிருந்தேன்.” என்று ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார்.