சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு கட்ட போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 3-வது கட்ட போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. புரோ கபடி லீக் வருடங்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்பி உள்ளது.
இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் யுபி யோதாஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அக்டோபர் 1-ம் தேதி யு மும்பாவுடன் மோதுகிறது.
தொடர்ந்து 3-ம் தேதி ஹரியான ஸ்டீர்ஸ் அணியுடனும், 5-ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணியுடனும், 7-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது தமிழ் தலைவாஸ் அணி. நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
தபாங் டெல்லி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பல்தான் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியை தமிழ் தலைவாஸ் அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காணலாம்.