“இங்கிலாந்துக்கு எதிராக 2 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடாமல் விலகியது இந்திய அணியின் தொடரை வெல்லும் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டது. பும்ரா தான் விளையாடும் போட்டிகளை அவரே தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாடியுள்ளார்.
“தேச அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த வீரர் தயாராகத்தான் இருக்க வேண்டும். அணியில் தேர்வான பிறகே இந்தப் போட்டியில் ஆடுவேன், அதில் ஆட மாட்டேன், தொடரில் 3 போட்டிகளில் தான் ஆடுவேன் என்பதையெல்லாம் பும்ரா தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அசார்.
“காயம் பிரச்சனையென்றால் வாரியமும் வீரரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு வீரர் ஒரு தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றால், அவர் அந்தத் தொடரில் இதில் ஆடுவேன், இன்னொன்றில் ஆடமாட்டேன் என்றெல்லாம் சுயதேர்வு செய்து கொள்ள முடியாது.
பணிச்சுமை இருக்கிறது என்பதை மறுக்கவில்லை, ஆனால், இந்தக் காலத்தில் அதையெல்லாம் மேலாண்மை செய்துதான் ஆகவேண்டும். ஏனெனில் அவர் நாட்டுக்காக ஆடுகிறார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் பிரமாதமாக அவர் இல்லாதபோது ஒருங்கிணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர் என்பது வேறு விஷயம். பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றது நம் அதிர்ஷ்டமே. ஆனால், ஒரு குறிப்பிட்ட சூழலில் பும்ரா வேண்டும் என்று தேவை எழும்போது நெருக்கடி எழும்போது என்ன செய்வது?
சிராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த பவுலிங்கை வீசினார். நள்ளி கோஷ்ட் பிரியாணி மற்றும் பாயாவுக்கு நன்றி. அவர் நல்ல உடல் வலுவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக அவர் கால்கள் பலம் வாய்ந்ததாக உள்ளன.
உற்சாகமும் ஆற்றலையும் காட்டுகிறார் சிராஜ். இந்தியாவுக்காக ஆடும் வேட்கையும் தாகமும் தொடர் முழுதும் சிராஜிடம் தெரிந்தது. அதுவும் அதிக ஓவர்களை தொடரில் வீசிய போதும் களைப்பு இல்லாமல் கஸ் அட்கின்ஸனை கிளீன் பவுல்டு செய்த அந்தப் பந்து மணிக்கு 143 கிமீ வேகம் கொண்டது. இது அவரது உடல்தகுதிக்கும் அவரது மன/உடல் வலுவுக்குமான ஆதாரமாகும். இன்று அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.
ஓவலில் வீசிய ஸ்பெல் மிகப் பிரமாதம், பும்ரா இல்லாத நிலையில் பொறுப்புகளை அவர் சுமந்த விதம் பாராட்டுக்குரியது. இங்கிலாந்து பேட்டர்களை கடும் சவாலுக்குள்ளாக்கினார். தீவிரமாக வீசினார், இந்திய அணியின் புதிய சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது சிராஜ் தான்” என்றார் அசார்.