சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. அண்மையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த தொடரின் நான்காவது போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், பும்ரா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டுமென அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
“நான் தேர்வுக்குழுவில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்திருந்தால் நிச்சயம் பும்ராவை அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட வைக்க முடிவு செய்வேன். இந்திய அணிக்கு 4-வது டெஸ்ட் போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் நான்காவது போட்டியில் ஒருவேளை நாம் தோல்வியடையும் பட்சத்தில் இந்த தொடரை இழந்து விடுவோம்.
எனவே, என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் பும்ரா விளையாடியாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடைசி போட்டியிலும் அவரை நான் விளையாட வைப்பேன்” என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார்: இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே 5 போட்டிகளில் மூன்றில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என இந்திய அணி தெரிவித்தது. ஆனால், அவர் விளையாடும் போட்டி எது என அறிவிக்கவில்லை. ஹெட்டிங்லி (முதல் டெஸ்ட்) மற்றும் லார்ட்ஸ் (3-வது டெஸ்ட்) போட்டியில் பும்ரா விளையாடி உள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் (2-வது டெஸ்ட்) போட்டியில் அவர் விளையாடவில்லை. நான்கு மற்றும் ஐந்தாவது போட்டி மான்செஸ்டர் மற்றும் ஓவலில் நடைபெறுகிறது. இதில் ஓவல் போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புகள் அதிகம் என தகவல்.