சென்னை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இந்த சூழலில் அது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியில் விளையாடியபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.
இந்நிலையில், பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பது குறித்து சிராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “வெளியில் இருந்து எழும் இரைச்சல் சப்தங்களை பும்ரா கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவரை மிக கவனத்துடன் இந்திய அணி கையாள்கிறது.
ஏனெனில், இந்திய அணிக்கு அவரது இருப்பு மிகவும் அவசியம். ஆசிய கோப்பை இப்போதுதான் நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது, பின்னர் 2027-ல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அவர் அணியின் முதுகெலும்பு. தன் தேசத்துக்காக தனது செயல்திறனை வெளிப்படுத்த அவர் விரும்புகிறார். அதற்கான ஆர்வத்துடன் உள்ளார். அதை இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் காயமடைந்தால் எப்படி விளையாட முடியும்?” என கூறினார்.