ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும் குறிப்பாக டெஸ்ட் போட்டித் திறமைகளை 3ம் நிலையில் அப்படியே கொண்டு வந்தார். ராகுல் திராவிட் போன பிறகு அவரைப் போலவே இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் புஜாரா.
இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கொஞ்சம் கண்ணியமாக நடத்தி அவருக்குரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்திருக்கலாம். கோலி என்னும் மாவீரனும் இப்படித்தான் கடைசி பிரியாவிடையை மைதானத்தில் கொடுக்காமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது பெரிய வருத்தம்தான். எப்படி திராவிட், சச்சின், லஷ்மண் இந்திய நடுவரிசையை ஒரு காலத்தில் தாங்கிப் பிடித்தார்களோ, இவர்கள் ஓய்வுக்குப் இறகு புஜாரா, கோலி, ரஹானே என்று கூறலாம்.
103 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 7,195 ரன்களை 43.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 19 சதங்களையும் 35 அரைசதங்களையும் எடுத்ததோடு தன் டெஸ்ட் வாழ்க்கையில் 863 பவுண்டரிகள் 16 சிக்சர்களை விளாசியதோடு 66 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ என்று சொல்லப்படும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் உட்பட 5,579 ரன்களை 57.01 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 16 சதங்கள், 34 அரைசதங்கள் இதில் அடங்கும். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இவருக்கு 5 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் மிட்செல் ஜான்சனின் பந்து ஒன்று தரையோடு தரையாகத் தாழ்வாக வந்ததில் எல்.பி. ஆனார், அதிர்ச்சிகரமான பந்து. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி ஆடிய போது 89 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 72 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அப்போதே ஒரு நல்ல பேட்டர் இந்திய அணிக்குக் கிடைத்ததாக இயன் சாப்பல் வர்ணனையில் தெரிவித்தார்.
புஜாராவின் கடைசி டெஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடியதுதான். இதில் முதல் இன்னிங்சில் 14 இரண்டாவது இன்னிங்சில் 27 அவ்வளவுதான். அதன் பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
ஆடிய சிறந்த இன்னிங்ஸ்கள்: முதல் அறிமுகப் போட்டியில் பெங்களூருவில் 2வது இன்னிங்ஸில் எடுத்த 72 ரன்கள் அற்புதமானது. இப்போது ராகுல் திராவிட்டின் அதே 3ம் நிலையில் இறங்கினார். ஸ்பின், வேகப்பந்து வீச்சை சிறந்த முறையில் ஆடியது இந்திய அணிக்கு உறுதியான வீரர் ஒருவர் கிடைத்ததை அறிவித்தது.
ஜொஹான்னஸ்பர்க் 153 ரன்கள்:தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி 2013-ல் சென்ற போது டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர் அடங்கிய வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அதுவும் கிரீன் டாப் பிட்சில் 2வது இன்னிங்சில் புஜாரா 202 ரன்களை எடுத்தது, அவரது ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ் எனலாம். 23/1 என்ற போது இறங்கினார். முரளி விஜய்யுடன் 70 ரன்களைச் சேர்த்தார், பிறகு விராட் கோலியுடன் இணைந்து 222 ரன்களைக் குவித்தனர். 270 பந்துகளில் புஜாரா 21 பவுண்டரிகளுடன் 153 ரன்களைக் குவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 458 ரன்கள். ஆட்டம் ட்ராவில் முடிந்ததற்குக் காரணம் தோனியின் மட்டரகமான கேப்டன்சிதான். இரண்டாவது புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்தின் சணற்கண்டு வெளியே வரும் வரை 45-46 ஓவர்களை வீசியது தென் ஆப்பிரிக்காவுக்கு வசதியாகப் போய்விட்டது.
ராஞ்சி, 202 ரன்கள்:2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் 202 ரன்களைக் குவித்தார் புஜாரா. இதுவும் ஒரு ஆகச்சிறந்த இன்னிங்ஸ். ஆஸ்திரேலியா 451 ரன்களைக் குவித்திருந்தது. புஜாரா இறங்கி முரளி விஜய்யுடன் சதக்கூட்டணி அமைத்தார். நடுவரிசை வீரர்கள் சரியாக ஆடாமல் போனாலும் புஜாரா உறுதியாக நின்று 202 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 525. மாரத்தான் இன்னிங்ஸ். இந்திய அணி 603/9 டிக்ளேர் செய்தது. போட்டி டிராவில் முடிந்தது.
2018 புஜாராவின் கோல்டன் ஆஸ்திரேலிய தொடர்:2018 ஆஸ்திரேலிய தொடர் புஜாரா மீது கோலி-ரவிசாஸ்திரி கூட்டணிக்கு இருந்த ஐயத்தை கேள்விக்குட்படுத்துமாறு அமைந்தது, இந்தத் தொடரில் புஜாரா 3 சதங்களை அடித்தார். அதில் அடிலெய்டில் எடுத்த 123 மற்றும் 71 ரன்கள் அபாரமானது. முதலில் இந்திய அணி 41/4 என்று சரியும் அபாயத்தில் இருந்தது. ஆனால் சுவர் புஜாரா நின்றார் 246 பந்துகளில் 123 ரன்களை எடுத்ததால் இந்திய அணி 250 ரன்களைத் தொட்டது. இதோடு இல்லாமல் 2வது இன்னிங்சில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த மேட்ச் வின்னிங் 71 ரன்களை எடுத்தார் புஜாரா. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நெருங்கி வந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகித் தோற்றனர். பும்ரா, ஷமி, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பிறகு பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்கிறது, அடுத்த பாக்சிங் டே டெஸ்ட்டில் புஜாரா முதல் இன்னிங்சில் 106 ரன்கள் என்று சதம் எடுக்க இந்திய அணி 443/7 டிக்ளேர் செய்தார் கோலி. பும்ராவின் பந்து வீச்சை ஆட முடியாமல் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்குச் சுருண்டது, பும்ரா 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள். இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடர்ந்து ஆட கமின்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 106/8 என்று இந்தியா டிக்ளேர் செய்ய ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 399 ரன்கள். ஆஸ்திரேலியா 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது.
அடுத்த சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 622/7என்று பெரிய ரன்களைக் குவித்ததில் புஜாரா 373 பந்துகளில் 193 ரன்களை விளாசினார். ரிஷப் பண்ட் 159 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா பாலோ ஆன் ஆடியது 5ம் நாள் ஆட்டம் மழையால்நடைபெறாததால் தோல்வியிலிருந்து தப்பியது. இந்தத் தொடரில் புஜாரா 3 சதங்கள் இந்திய வெற்றியில் பெரிய பங்களிப்பை நிகழ்த்தியது.
2020-21 ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் ஜொலித்த புஜாரா:2020-21-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்றபோதுதா விராட் கோலி தலைமையில் 36 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி படுதோல்வி கண்டது. கோலி உடனே விடுப்பில் இந்தியாவுக்குத் திரும்ப ரஹானே கேப்டன்சி பொறுப்பை ஏற்று சகலரும் அதிர்ச்சியடையும் விதமாக ஆஸ்திரேலியாவில் இன்னொருமுறை இந்திய அணி தொடரை வென்றது.
இந்தத் தொடரிலும் புஜாரா பிரமாதமாகப் பங்களிப்புச் செய்தார். சிட்னியில் 50 மற்றும் 77 அதுவும் 407 ரன்கள் வெற்றி இலக்கை கிட்டத்தட்ட இவரும் ரிஷப் பண்ட்டும் சேசிங் செய்திருப்பார்கள், ஆனால் இருவரும் ஆட்டமிழக்க கடைசியில் ஹனுமா விஹாரி, அஸ்வின் கிட்டத்தட்ட 35 ஓவர்களுக்கும் மேல் தாக்குப் பிடித்து போட்டியை டிரா செய்தனர். முதல் இன்னிங்சிலும் 50 ரன்களை 176 பந்துகளில் எடுத்தார், பேய் மாதிரி வீசிய கமின்சின் ஷார்ட் பிட்ச் பந்துகளை தன் உடலில் தாங்கினார். பிரிஸ்பன் டெஸ்ட்டில் 95 பந்துகளில் 24 ரன்களையும் 2வது இன்னிங்சில் 211 பந்துகளில் 56 ரன்களையும் பல அடிகளை வாங்கி எடுக்க ரிஷப் பண்ட் பிற்பாடு வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 2-1 என்று தொடரைக் கைப்பற்றியதில் ஆஸ்திரேலியாவே அதிர்ச்சியில் உறைந்தது.
சச்சின் டெண்டுல்கர் கூறியது போல் புஜாராவின் கோல்டன் சீரியஸ் என்றால் அது 2018 ஆஸ்திரேலியா தொடர்தான். அதியற்புதமான ஒரு அணிக்கான வீரர் எந்த வித சடங்கு சம்பிரதாயமுமின்றி அப்படியே புறக்கணித்து ஓய்வு பெற வைத்ததில் பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.