சென்னை: 16 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி 65.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
அதிகபட்சமாக கேப்டன் பிரதோஷ் ரஞ்ஜன் பால் 125 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 11, விமல் குமார் 8, ஆந்த்ரே சித்தார்த் 24, பாபா இந்திரஜித் 22, விஜய் சங்கர் 9, வித்யுத் 0, ஹேமச்சந்திரன் 0, திரிலோக்நாக் 2 ரன்களில் நடையை கட்டினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஜிதேஷ் 89 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களும், அச்யுத் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இமாச்சல் பிரதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான அபிஷேக் 4 விக்கெட்களையும், திவேஷ் சர்மா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கோஜன் ‘பி’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள டிஎன்சிஏ லெவன் – மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 367 ரன்கள் குவித்த நிலையில் மழை காரணமாக முதல் நாள் முடித்துக் கொள்ளப்பட்டது. தொடக்க வீரர்களான முஷிர் கான் 30, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 13 ரன்களிலும், ஹர்ஷ் அகவ் 2 ரன்ளிலும் ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு சுவேத் பார்க்கருடன் இணைந்த சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடினார்.
சுவேத் பார்க்கர் 121 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் சோனு யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மட்டையை சுழற்றிய சர்பராஷ் கான் 114 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் விளாசிய நிலையில் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஆகாஷ் ஆனந்த் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆகாஷ் பார்கர் 67, ஹிமான்ஷு சிங் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர். டிஎன்சிஏ லெவன் அணி தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.