துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் நிகழ்வின் போது தொகுப்பாளர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸும் இடம் பெற்று நேர்காணல்களை நடத்தினர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் வீரர்கள் இருவர் டாஸில் தொகுப்பாளர்களாக பணியாற்றி நேர்காணல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு காரணம் பாகிஸ்தான் அணி இந்திய தொகுப்பாளரிடம் பேச முடியாது என்று கூறியதுதான்.
லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போது ரவி சாஸ்திரி, தொகுப்பாளராக செயல்பட்டு இரு அணிகளின் கேப்டன்களான சூர்யகுமார் யாதவ், சல்மான் அலி ஆகா ஆகியோரிடம் நேர்காணல் செய்திருந்தார்.
இந்நிலையில் இறுதிப் போட்டியையொட்டி நடுநிலை தொகுப்பாளரை நியமிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்
கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ரவி சாஸ்திரியை மாற்ற முடியாது என பிசிசிஐ பதில் அளித்தது.
இதையடுத்து நடுநிலை தீர்வாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆலி ஆகா, வக்கார் யூனிஸிடம் பேசுவார் என்றும், சூர்ய குமார் யாதவ், ரவி சாஸ்திரியுடன் உரையாடுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.
டாஸ் முடிவடைந்ததும் கோப்பையுடன் சல்மான் அலி ஆகா மட்டும் தனியாக நின்றபடி போட்டோ ஷூட் நடத்தினார். போட்டோ ஷூட் நடத்துவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தங்களிடம் முன்னதாகவே தகவல் தெரிவிக்கவில்லை என பிசிசிஐ குற்றம்சாட்டியது. இதனால் போட்டோ ஷூட்டில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை.