மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள், ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்கள், டிக்கெட் மூலம் வருவாய் என பலவழிகளில் பிசிசிஐ வருவாயை ஈட்டுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-க்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த நிதியாண்டில்(2023-24) மட்டும் ரூ.4,193 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
பிசிசிஐ-க்கு கிடைக்கும் வருவாயில், நாட்டில் உள்ள அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து நிலுவை தொகையையும் வழங்கப்பட்ட பிறகு உள்ள வருவாய் உயர்வு ரூ.4,193 கோடியாகும். அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் வருவாய் ரூ.3,906 கோடி ஆக இருந்தது. 2024-ல் அது 2 மடங்கு அதிகரித்து ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.4082 கோடி அதிகரித்தது.
தற்போது பிசிசிஐ வசம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.20,686 கோடி உள்ளதாகவும் கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் ரொக்க கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை ரூ.20,686 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐ-க்கு வருவாயாக ரூ.14,627 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ஐசிசி-யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாய் பகிர்வு, விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் பிசிசிஐ வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.