மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ-யின் புதிய தலைவர் மற்றும் அடுத்த ஐபிஎல் சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிசிசிஐ தலைவராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகினார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பிசிசிஐ அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு அதிகாரியும் 70 வயதுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஐபிஎல் சேர்மனாக இருந்து வரும் அருண் துமால் பிசிசிஐ-யில் 6 வருடங்கள் பதவி காலத்தை நிறைவு செய்துள்ளதால் அவரும் விலக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இதனால் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய ஐபிஎல் சேர்மன் அறிவிப்பும் வெளியாகக்கூடும்.