Last Updated : 21 Apr, 2025 12:50 PM
Published : 21 Apr 2025 12:50 PM
Last Updated : 21 Apr 2025 12:50 PM

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் கடந்த முறை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 – 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘கிரேடு ஏ+’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் ஒப்பந்த விவரம்:
- கிரேடு ஏ+ (4 வீரர்கள்) – ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
- கிரேடு ஏ (6 வீரர்கள்) – முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்
- கிரேடு பி (5 வீரர்கள்) – சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர்
- கிரேடு சி (19 வீரர்கள்) – ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதார், துருவ் ஜுரேல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா
இந்த முறை வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ஜிதேஷ் சர்மா மற்றும் ஷர்துல் தாக்குர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில்தான் தாக்குர் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஸ்ரேயஸ் ஐயர். அதன் மூலம் அவர் இப்போது வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இது தவிர இந்த காலகட்டத்தில் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ‘கிரேடு சி’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!