பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரை இறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் வியாழக்கிழமை அன்று நடைபெற இருந்த ஆட்டம் ரத்தானதாக தகவல். இந்தியா விலகிய நிலையில் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளதாக தகவல்.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடரின் அரை இறுதிக்கு இந்தியா vs பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின. இரண்டு அரை இறுதி ஆட்டமும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் உடன் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். ஏற்கெனவே இந்த தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன? – கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துள்ளனர். தேசத்தின் நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இந்திய அணி வீரர்கள் கூறியுள்ளதாக தகவல். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். ஹர்பஜன் சிங், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.