பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உணர்வுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம், அந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
இன்னும் நிறைய என்னென்னவோ செய்திகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் ஓய்வறை வாசலில் பாகிஸ்தான் வீரர்கள் காத்துக் கொண்டிருந்தபோது இந்திய அணி ஓய்வறைக் கதவு படாரென்று சாத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
போட்டிக்கு முன்பே இந்திய அரசு மற்றும் பிசிசிஐ உடன் ஆலோசித்து, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் முடிவெடுத்து விட்டார் என்று அவரே கூறியுள்ளார். கைகுலுக்காமல் சென்றது பாகிஸ்தான் வீரர்களை வெளிப்படையாக தங்கள் ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தச் செய்தது. பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
கைகுலுக்காமல் மறுத்துப் போனதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, போட்டி முடிந்தவுடன் நிகழும் பரிசளிப்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இது ஒளிபரப்பாளர்களுக்கானது, அதை பொதுவாக யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். பாகிஸ்தான் அணி ஆட்டம் முடிந்து சில மணி நேரங்கள் சென்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல் அதன் பிறகான இந்தியாவின் பதிலடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகே இப்போதுதான் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடுகின்றன.
பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் பல அணி பங்குபெறும் தொடர்களில் மட்டும் ஆடுவதென்பதும், இருதரப்பு தொடர்களை தவிர்ப்பதும் இந்திய அரசின் கொள்கையாகவே வகுத்தெடுக்கப்பட்டுள்ளது.
சூரியகுமார் யாதவ் கூறும்போது, “நம் அரசுடன் பிசிசிஐ-யும், நாங்களும் நிற்கிறோம். கைகுலுக்க வேண்டாம் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விளையாடவே இங்கு வந்தோம். விளையாடினோம், பதிலடி கொடுத்தோம்” என்றார்.
கைகுலுக்காமல் போவது ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட்டுக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “வாழ்க்கையில் சில விஷயங்களும், சில முடிவுகளும் விளையாட்டு வீரர்களுக்குரிய உணர்வுக்கு அப்பாற்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நிற்கிறோம். இதன் மூலம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்” என்றார்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறும்போது, “நாங்கள் கைகுலுக்கத் தயாராகவே இருந்தோம். இந்திய அணியின் செய்கை எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. நாங்கள் கைகொடுக்கத்தான் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஓய்வறைக்குள் புகுந்து கொண்டனர்.
நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளித்தது என்றால், இப்படி முடிந்தது, அதைவிட ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் கைகொடுக்க விருப்பபட்டோம்” என்றார்.
ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்ட், டாஸின்போது கேப்டன்கள் கைகொடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதாக, பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை பைகிராஃப்டுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் மகா அறுவையாக, அனர்த்தமான போட்டிகளாக இருக்கும்போது இதுபோன்ற விவகாரங்களால் விறுவிறுப்படைவது விரும்பத்தகுந்ததல்ல என்பதே நடுநிலை விளையாட்டுப் பிரியர்களின், நோக்கர்களின் பார்வையாக உள்ளது.