கொழும்பு: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த மாதம் 30-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி கடந்த 30-ம் தேதி அன்று தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் விளையாடியது. இதில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
தொடர்ந்து நேற்று (அக்.5) பாகிஸ்தான் அணி உடன் இந்தியா விளையாடியது. இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இந்திய அணிக்காக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஸ்மிருதி, 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டை இழந்தது. பிரதிகா – 31, கேப்டன் ஹர்மன்பிரீத் – 19, ஹர்லீன் – 46, ஜெமிமா – 32, ஸ்னே ராணா – 20, தீப்தி – 25, ஸ்ரீசரணி – 1, கிரந்தி – 8, ரேணுகா சிங் – 0 ரன் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதலில் பந்து வீசிய இந்திய அணியை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதுதான் திட்டம் என டாஸின் போது பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தெரிவித்தார். அதன்படி அவர்களது முதல் இன்னிங்ஸ் செயல்பாடு அமைந்தது. இதில் இந்திய அணிக்கு ஆறுதல் தந்தது ரிச்சா கோஷின் ஆட்டம்தான். 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் அவர்.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இருப்பினும் ஸித்ரா அமீன் மற்றும் நட்டாலியா பர்வேஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நட்டாலியா, 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிய ஸித்ரா அமீன், 106 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்களில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்த கிரந்தி கவுட், பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார். இந்த தொடரில் இந்திய அணி, இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட் செய்த போது ஸ்ட்ரைக் ரொட்டேஷனில் தடுமாறியது. அதே போல பீல்ட் செய்த போது மூன்று கேட்ச்களை நழுவ விட்டது. இதற்கு இந்திய அணி விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையெனில் முக்கிய ஆட்டத்தில் அழுத்தம் கூடும்.